Tuesday, October 13, 2015

நவராத்திரி

"சக்தி பின்னமிலான் எங்கள் பிரான்" என்று திருவருட்பயன் குறிப்பிட்டது போல் அர்த்தநாதீஸ்வரராகிய சிவத்தின் செம்பாதியாகவும் சிவத்தினின்று பிரிக்க முடியாததாகிய சக்தியை வியந்து போற்றுவதாய் அமைந்த விழாக்களில் நவராத்திரி மேன்மையானது.
                                 புரட்டாதி மாதம் கன்னி இராசியில் சூரியன் சஞ்சரிக்கும் பிரதமைத் திதி நாள் அதிகாலையில் சூரியோதயத்தில் நவராத்திரி ஆரம்ப தினமாக அமைய வேண்டும்.
அன்னையை வழிபட உவப்பான காலம் இரவு என்பர். அதனால்தான் இந்த விழா இரவில் கொண்டாடப்படுவதாகி நவராத்திரி என்று பெயராயிற்று. வாழ்வு முழுமை பெற வாழ்வின் அடிப்படையாக வீரம்,  செல்லம்,  கல்வி என்ற மூன்று தகுதியும் நிரம்ப வேண்டும். மூன்றினதும் பூரணத்துவம்தான் நிறைவான வாழ்க்கை ஆகும்.
                             செயல், முயற்சி, உறுதி, ஊக்கம், திறமை என்பவற்றின் திரண்ட நிலைதான் வீரம். இந்த வகை வீர நினைவுடன் நவராத்திரி கால முதல் மூன்று தினங்களும் துர்க்கை வழிபாடு நடைபெறும். துர்க்கை(பார்வதி) பரமசிவனின் சக்தி. அவன் பாகத்துறைபவள். சக்தியை இம் மூன்று நாட்களும் பொங்கல், வடை, பால், பழங்கள், பானகம் வைத்து இம்மந்திரத்தை தினம் 108 முறை ஜெபித்தவாறு வணங்கலாம்.
"சக்தி என்னும் தேவி வணங்குகின்றேன் உன்னையம்மா அங் வங் சிங் வங் சிவாய நமஹ ஓம் வங் வங் சிங் பெருந்தேவி வசி வசி தேவி சக்தியெனும் தேவி நீ அருள் தந்து வந்திடுவாய் வசி வசி சுவாகா அகிலத்தைக் காப்பவளே அகிலாண்ட ஈஸ்வரியே ஓம் வசி வசி சக்தி வசி வசி சுவாகா.
  
                                அடுத்து வரும் மூன்று நாட்களும் செல்வத்துக்குரிய தேவியாகிய மகாலட்சுமியின் நாட்களாகும். மகாலட்சுமி மஹாவிஸ்ணுவின் சக்தி. அவர் மார்பில் உறைபவள். லட்சுமி தேவியை குத்துவிளப்கிற்கு மாலை, குங்குமம் என்பன இட்டு விளக்கேற்றி அவல், பால்பாயாசம், பழவகைகள், தேங்காய் முதலியன வைத்து கீழ் கண்ட மந்திரத்தை 108 முறை உச்சரித்தவாறு பூஜிக்கலாம்.
"ஓம் லட்சுமி தேவி உன்னருள் நித்தம் வேண்டும் உயரிய செல்வம் தந்து அருளையும் பொழிய வேண்டும் ஓம் ரீம் மகாலட்சுமி துணையாக நீ இருக்க வேண்டும் ஐயும் கிலியும் சவ்வும் அங் உங் வங் வங் ஆகாச லட்சுமி நீ அடிமேல் அடிவைத்து வர வேண்டும் அனைத்து செல்வமும் தந்து நீ சர்வலட்சுமியாய் திகழ வேண்டும் வா வா நசி மசி வசி வசி நமஹ வந்தெனக்கு அருள் தந்து ஒளியூட்ட வேண்டும் அம்மா"   

                     இறுதி மூன்று நாட்களும் கல்வித் தெய்வமாகிய சரஸ்வதி தேவியின் நாட்களாகும். சரஸ்வதி பிரமனின் சக்தி. அவர் நாவினை இருப்பிடமாக கொண்டவள். கலைமகளை வாழைஇலையில் சுண்டல், பொரி, வடை, பஞ்சாமிர்தம் முதலியவை வைத்து கீழுள்ள மந்திரத்தை 108 முறை செபித்து பூஜை செய்யலாம்.
"நல்லறிவை நான் பெறவே நாயகியே வணங்குகிறேன் நாமகளே சரஸ்வதியே அறியாமை விலகிடவே அரி ஓம் என்று சொல்லி உன்பாதம் பணிகின்றேன் ஐயும் கிலியும் சௌவும் சிவாய நமஹ வா வா தேவி நசி மசி சரஸ்வதியே அங் சிங் வங் வங் சுவாகா தேவியே".

நவராத்திரியின் ஒன்பதாவது நாள் மகாநவமி ஆகும். இந்த மகாநவமி காரணமாகவே நவராத்திரி மகாநோன்பு ஆயிற்று. பத்தாவது நாள் விஜயதசமி ஆயுத பூசையுடன் நிறைவு பெறுகின்றது.

வராத்திரிக்கு கும்பம் வைக்கும் முறையானது வாழையிலையில் புனிதமான மண் பரவி மண்பானையில் நீர்நிறைத்துக் கும்பம் வைக்க வேண்டும். கும்பத்தை சூழ நவதானியங்கள் விதைத்து அன்று மட்டும் நீர் தெளிக்க வேண்டும். அடுத்து வரும் தினங்களில் நீர் தெளிக்க வேண்டியதில்லை. கும்பம் மண்பாணையில் வைக்கப்பட்டுள்ளமையால் பானையிலிருந்து கசியும் நீரிலேயே தானியம் முளைகொண்டு வளரும். கும்பத்துக்கு அண்மையாக சக்திகளின் படங்கள் தொங்கவிடப்படலாம். தீபம் ஒன்று ஆணையாமல் தினமும் சுடர்விட்டுக் கொண்டே இருப்பது நல்லது. நாளும் மலர்கள் கொண்டு அலங்கரிப்பதோடு அவல், கடலை, நாவற்பழம்,  கற்கண்டு முதலிய நிவேதனங்கள் வைக்கலாம். வழமையான நிவேதனப் பொருட்களான வெற்றிலை, பாக்கு, பழம், இளநீர் அல்லது தேங்காய் என்பனவும் நிவேதிக்கப்பட வேண்டும். தீபதூப ஆராதனைகள் முடிந்ததும் அபிராமி அந்தாதி, சகலகலாவல்லி மாலை முதலியவற்றை படிக்கலாம். பத்தாவது நாள் கும்ப நீரை தீர்த்த கிணற்றிலோ ஆற்றிலோ கடலிலோ கலக்க வேண்டும்.

நவராத்திரி விழாவை வீடுகளில் கொலு வைத்து வழிபடும் முறை கவர்ச்சிகரமானது. ஐந்து படி அல்லது ஏழு படி வரக்கூடிய முறையில் மேடையை அமைத்து அலங்கார பொம்மைகளை ஒழுங்காக அடுக்கி வைப்பர். அங்கே புனிதம் பேணப்பட வேண்டும். பக்கத்தில் கும்பமும் வைத்து வழிபடலாம்.

நவராத்திரி விரதம் அனுஷ்டிப்பதால் முப்பெரும் சக்திகளின் அருள் எமக்கு கிட்டும். இத்தேவியரின் கடைக்கண் பார்வை பட்டவர்களுக்கு இவ்வையகத்தில் பெறக்கூடிய பேறு வேறேதும் இல்லை.